
திருநெல்வேலி
திருநெல்வேலியில், டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்கள் தங்களுக்கு மாற்று வேலை தரும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று டாஸ்மாக் சாராய கிடங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டபோது சூளுரைத்தனர்.
கடந்த 13-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஏழு மண்டலங்களில் டாஸ்மாக் சாராய கிடங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
“டாஸ்மாக் சாராயக் கடைகள் மூடப்பட்டதால் பணியிழந்த 20 ஆயிரம் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கும் வகையில் தற்போது இயங்கி வரும் சாராயக் கடைகளில் உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
இல்லையெனில் அரசு துறைகளில் உள்ள வெற்றுப் பணியிடங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே முன்னீர்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் சாராயக் கிடங்குடன் இணைந்த மேலாளர் அலுவலக வளாகத்தில் டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்கள் குவிந்தனர்.
சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் சாராய கிடங்கின் வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப்படுவோம் என்று சூளுரைத்தனர்.
மதியம் அங்கேயே வரிசையில் நின்று சாப்பிட்டுவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் சரவண பெருமாள், பொருளாளர் இளமுருகு, மாநில குழு உறுப்பினர் சிவன்ராஜ், நிர்வாகிகள் மாரியப்பன், சுப்பையா, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டச் செயலாளர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தினால் டாஸ்மாக் கிடங்கின் வளாகத்தில் ஏராளமான காவலாளர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.