
இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்….போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் அவதி…
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பேருந்து சேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடைவிடுமுறை என்பதால் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பொது மக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னையில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் மின்சார ரயில்களிலும், வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
தனியார் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களில் பெரும்பாலானோர் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் 2,600 அரசுப் பேருந்துகளில், 400 மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. திருச்சியில் 95 சதவீதம், மதுரை, திருவாரூரில் 90 சதவீத அளவுக்கு பேருந்துகள் ஓடவில்லை; தேனி மாவட்டத்திலும் பேருந்து சேவை பெருமளவில் பாதிப்புக்குள்ளானது. நாமக்கல்லில் 90 சதவீத அளவுக்கு அரசுப் பேருந்துகள் ஓடின. சேலம் மாவட்டத்தில் 86, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தலா சுமார் 70, விருதுநகரில் 50, திருவண்ணாமலையில் 45, ராமநாதபுரத்தில் 15 சதவீதப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற சில சம்பவங்களில், 55 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்வதால் அதிருப்தி அடைந்துள்ள பொது மக்கள் எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக வரும் செப்டம்பருக்குள் நிறைவேற்றப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
இப்படி இரு தரப்பினரும் தங்கள் பிரச்சனைகளில் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் இப்போதைக்குள் முடிவுக்கு வருமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தை சமாளிக்கும் விதமாக தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கு பொது மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
நேற்று இரவு நெல்லையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரு பெட்டிக்கு 4 அல்லது 5 பேரே பயணம் செய்தனர்.