
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள்ளது. இதன் அருகில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் உறவினர் வீடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு அவர் கடை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.
இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பஸ் நிலையத்தை சுற்றி, நகராட்சி சார்பில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. அப்போது, அமைச்சரின் உறவினர் கடை நடத்துவதற்காக, சுவரை அந்த பகுதியில் மட்டும் பாதியில் நிறுத்தி வைத்துள்ளனர். இடத்தை அமைச்சரின் உறவினர் ஆக்கிரமித்து, வியாபாரம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.‘
நகராட்சிக்கு சொந்தமான இடத்தை, ஆக்கிரமிப்பு செய்த அமைச்சரின் உறவினரிடம், அவரது நிலம் போல வரி வசூல் செய்து வருகிறது. இதற்கான ரசீதும் நகராட்சி சார்பில், அமைச்சரின் உறவினருக்கு வழங்கப்படுவதாக தெரிகிறது.
அதேபோல், நகராட்சிக்கு உட்பட்ட முத்தானந்தபுரத்தில் 3 சென்ட் நிலத்தில் இருந்த ஆண், பெண் கழிப்பறைகளை ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளனர். நகராட்சி குடிநீர் குழாய், கிணறு ஆகியவை இருந்த இடங்களையும் தனியார் சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்று கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பல சொத்துக்கள் ஆளுங்கட்சியினர் மற்றும் அரசியர் பிரமுகர்களின் உறவினர்கள் அபகரித்துள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இவ்வாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட கலெக்டரை கண்டித்தும், கோவில்பட்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் ‘5வது தூண்’ அமைப்பினர் நேற்று நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர், நகராட்சி பொறியாளர் சுப்புலெட்சுமியின்க்கு சென்ற, '5வது தூண்' அமைப்பின் தலைவர் சங்கரலிங்கம், உறுப்பினர் முருகன் ஆகியோர் தரையில் படுத்து தூங்கியபடி போராட்டம் நடத்தினர். அப்போது, மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை கண்டித்து கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.