
ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா மணக்காடு காலனியை சேர்ந்தவர் மயில்சாமி (30). கூலி தொழிலாளி. இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு 3 வயதில் தேஜா என்ற பெண் குழந்தை இருந்தது. இவர்கள் ஆஸ்பெட்டாஸ் கூரை அமைந்த வீட்டில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு மேற்கண்ட பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது சுதா, குழந்தை தேஜாவை, ஆஸ்பெட்டாஸ் கூரையில் பொருத்தப்பட்டு இருந்த கம்பியில் தொட்டில் கட்டி தூங்க வைத்து இருந்தார்.
சுமார் 11.30 மணியளவில் வீசிய பலத்த காற்றில் அப்பகுதியில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. வீடுகளும் இடிந்து விழுந்தன. அந்த நேரத்தில், மயில்சாமியின் வீட்டு ஆஸ்பெட்டாஸ் கூரை பெயர்ந்து, சூறைக் காற்றில் பறந்தது. அதில் தொட்டில் கட்டி தூங்க வைக்கப்பட்டு இருந்த குழந்தை தேஜாவும் பறந்து சென்று, அங்குள்ள சாலையில் விழுந்தது.
இதை பார்த்த பெற்றோர் பதறியடி, அலறி கூச்சலிட்டு ஓடினர். அங்கு படுகாயமடைந்து பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி கிடந்த குழந்தையை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை தேஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்டு பெற்றோர் கதறி அழுதனர்.
புகாரின்படி மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சூறைக்காற்றில் கூரை பெயர்ந்தபோது, குழந்தையும் சென்று விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் மரப்பட்டறையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, கட்டுமான தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.