
வி.கே.சசிகலா தனது பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தி.மு.க. அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு பேச்சு என்று செயல்படுகிறது. இதை தமிழக மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் விவகாரமே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை செய்ய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
2020ம் ஆண்டில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதி அளித்தார். 2021ல் திமுக.வின் தேர்தல் அறிக்கையிலும் தூய்மைப் பணியாளர் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். ஆனால் எதையுமே செயல்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் நடந்து கொண்டீர்களா என்பது தொடர்பாக முதல்வர் விளக்க வேண்டும்.
தி.மு.க. அரசுக்கு எத்தனை துறைகள் உள்ளன, எத்தனை செயலர்கள் உள்ளனர், அவர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என்று எதுவுமே தெரியவில்லை. தெரியாமல் வந்து ஆட்சியில் அமர்ந்து மக்களை பிழிந்து எடுக்கின்றனர். விளம்பரத்தால் தி.மு.க. ஆட்சியைப் பிடித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் நான் திமுக.வை ஆட்சிக்கு வர விட மாட்டேன். கடந்த 39 ஆண்டுகளாக அரசு நிர்வாகத்தை அறிந்தவளாக நான் இருக்கிறேன். இன்று மக்களை பார்ப்பதற்கே எனக்கு கஷ்டமாக உள்ளது.
ரேஷன் கடைக்கு வந்தால் பொருட்களே இருப்பதில்லை. இதை மறைப்பதற்காக வீடுகளுக்கே வந்து ரேஷன் பொருட்களை கொடுக்கிறோம் என்ற திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இது நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம். இதை செய்வேன் என செயல்படுத்துகின்றனர். காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்படும் என்று அறிவித்தனர். ஆனால் தற்போது வரை அதை செய்யவில்லை. தமிழக மக்கள் நலன் சார்ந்து அரசு ஒருபோதும் சிந்திப்பதே இல்லை. இப்படி இருந்தால் மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்? வரக்கூடிய தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்களிடமிருந்து எவ்வளவு பணத்தை தான் நீங்கள் வாங்குவீர்கள். மக்கள் அரசாங்கத்தை உங்கள் கையில் கொடுத்த நாள் முதல் நீங்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள். பொதுமக்களி்ன் பைகளில் இருந்து பணத்தை எடுப்பதற்காகவா உங்களை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்?
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஒருநாளும் ரோடு ஷோ சென்று கை கொடுத்துக் கொண்டு சென்றது கிடையாது. அது முதல்வர் செய்யக்கூடிய வேலை கிடையாது. நீங்கள் ஆட்சி நிர்வாகத்தை பார்க்க வேண்டும். மத்திய அரசை விமர்சிப்பதும், மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுவதும் தான் தி.மு.க. அரசின் பணியாக உள்ளது. 2026-ல் உறுதியாக ஜெயலலிதா ஆட்சி வரும். அந்த திறமை எங்களிடம் உள்ளது. தி.மு.க. அரசை மக்கள் நன்றாக புரிந்து கொண்டனர். தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர், எம்எல்ஏக்கள் அராஜகம் தான் நடக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் இப்படி நடைபெற்றதா என்று கேள்வி எழுப்பினார்.