
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே நல்லூர்வயல் பகுதியில் நடைபெற்ற கலை விழாவில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
நல்லூர்வயல் மற்றும் ஆலாந்துறை புதூர் சங்கமம் கலை குழுவின் 105-வது அரங்கேற்ற விழா, நல்லூர்வயல் பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவை முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
அப்போது, கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விழாவின் ஒரு அங்கமாக ஒயிலாட்டம் நடைபெற்றபோது, கலைஞர்கள் எஸ்.பி.வேலுமணியையும் தங்களோடு இணைந்து ஆடுமாறு கேட்டுக்கொண்டனர்.
கலைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட எஸ்.பி. வேலுமணி, அவர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடினார். பாரம்பரிய உடைகள் அணிந்த கலைஞர்களுடன் உற்சாகமாக ஆடிய எஸ்.பி. வேலுமணியைக் கண்டு, அங்கிருந்த அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிகழ்வில் சங்கமம் கலை குழுவின் ஆசிரியர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.