
Vice Presidential Candidate Trichy Siva: குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கடந்த மாதம் திடீரென ராஜினாமா செய்தார். உடல்நிலையை காரணம் காட்டி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது முதல் அடுத்த குடியரசு துணைத் தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி சார்பில் யார் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்படுவார்? என்ற கேள்வியும் எழுந்தது.
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்
இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் தேர்தலுக்கான பாஜகவின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் (கூடுதல் பொறுப்பு) பணியாற்றியவர். தமிழ்நாட்டில் பாஜகவும், திமுகவும் கீரியும், பாம்புமாக இருக்கும் நிலையிலும், சி.பி. ராதாகிருஷ்ணன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக விளங்கி வருகிறார்.
திமுகவிடம் ஆதரவு கேட்ட பாஜக
மேலும் கட்சி பாரபட்சமின்றி அனைவரிடமும் நெருங்கி பழகுவார் என்ற பெயரும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு உள்ளது. இதனால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் திமுக சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்கும்படி பாஜக சார்பில் ராஜ்நாத் சிங் ஸ்டாலினிடம் போனில் பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமியும் அனைத்து கட்சிகளும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்கும் திருச்சி சிவா
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய நண்பருக்கு ஆதரவு கொடுப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திருச்சி சிவா அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாஜக தரப்பில் ஒரு தமிழரை வேட்பாளரை அறிவித்த நிலையில், இந்தியா கூட்டணியும் பாஜகவுக்கு போட்டியளிக்கும் விதமாக தமிழரான திருச்சி சிவாவை களமிறக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
யார் இந்த திருச்சி சிவா?
திருச்சி சிவாவை பொறுத்தவரை சிறந்த நாடாளுமன்றவாதி என பெயரெடுத்தவர். பல ஆண்டுகளாக திமுகவின் மாநிலங்களவை எம்பியாகவும் திமுகவின் மாநிலங்களவை குழு தலைவராகவும் இருந்து வருகிறார். மிகச்சிறந்த பேச்சாற்றல் கொண்ட திருச்சி சிவா, மாநிலங்களவையில் பல தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்துள்ளார். நீட் தேர்வு உள்ளிட்ட தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டங்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் கொடுத்துள்ளார். அதே வேளையில் திருச்சி சிவா சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாதவர்.
தமிழர் vs தமிழர்
அண்மையில் இவர் எளிமையாக வாழ்ந்த, பெருந்தலைவர் காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என்று பேசியது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இந்தியா கூட்டணி திருச்சி சிவாவை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக நிறுத்தினால் தமிழர் vs தமிழர் என சிறந்த போட்டியாக அமையும். ஆனால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்கள் உள்ளதால் சி.பி. ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.