ஓங்கி அறைந்த இன்ஸ்பெக்டர்..தனி ஆளாக போராடிய கல்லூரி மாணவன்.. விழுப்புரத்தில் பரபரப்பு..

Published : Jan 02, 2022, 03:15 PM IST
ஓங்கி அறைந்த இன்ஸ்பெக்டர்..தனி ஆளாக போராடிய கல்லூரி மாணவன்.. விழுப்புரத்தில் பரபரப்பு..

சுருக்கம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து இரவில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட கல்லூரி மாணவனை, இன்ஸ்பெக்டர் ஒருவர் பளார் என கன்னத்தில் அறைந்து, தரதரவென அடித்து இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அந்த காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  

விழுப்புரம்  அருகே உள்ள  கோலியனூர்  பகுதியை  சேர்ந்தவர் ஆனந்தன்  மகன் மகேந்திரா. இவர் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார். தனக்கு சாதி சான்றிதழ் வழங்கும்படி கேட்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் மோகனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.மனுவை பெற்ற ஆட்சியர் மோகன், மாணவனுக்கு 31.12.2021-க்குள் சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி விழுப்புரம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சாதி சான்றிதழ் பெறுவதற்காக மாணவர் மகேந்திரா காத்திருந்துள்ளார். பல மணி நேரமாகியும் அதிகாரிகள் எந்த பதிலும் கூறவில்லை என தெரிகிறது. இரவு நேரம் வந்த அதிகாரிகள், உனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க முடியாது, உன்னுடைய தாத்தா உள்ளிட்ட முன்னோர்களின் சான்றிதழ் இருந்தால் மட்டும் தான் வழங்க முடியும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாணவர் மகேந்திரா இரவு 10 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தனிநபராக அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்ததும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து போலீசார் அங்கு விரைந்து வந்து மாணவர் மகேந்திராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறுநாள் காலை கலெக்டர் அலுவலகத்தில் நேரில் வந்து முறையிடும்படி கூறினர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மாணவர் மகேந்திரா தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லபடுகிறது.  அப்போது அந்த மாணவரை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதி, தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார். மேலும் அவரை அடித்து உதைத்து தரதரவென அங்கிருந்து இழுத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில்  போராட்டம் நடத்திய மாணவனை தாக்கிய சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கணபதியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

இதுக்குறித்து மாணவன் கூறியபோது, 10 நாட்களுக்கு முன்பு ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தேன். அந்த மனுவை வாங்கியதும் விழுப்புரம் ஆர்டிஓவை அழைத்து கல்லூரி மாணவர்களுக்கு உடனடியாக விசாரணை மேற்கொண்டு வரும் 31ம் தேதிக்குள் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆட்சியர் உத்தரவிட்டும் எங்களை நாயை விட கேவலமாக அதிகாரிகள் நடத்தினார்கள். இந்த 15 நாட்களாக ஜாதி சான்றிதழ் கொடுக்க முடியாமல் காலேஜுக்கும் என்னால் செல்ல முடியாத நிலைமை உள்ளது. இதைகூட புரிந்து கொள்ளாமல், என்னை அந்த இன்ஸ்பெக்டர் அடித்து இழுத்து சென்றுவிட்டார்" என்று கண்ணீருடன் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!
அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்