’போலீஸ்’னா அப்படி இருக்கனும்.. இதெல்லாம் எற்றுக்கொள்ள முடியாது.. ஒபனாக அட்வைஸ் பண்ண டிஜிபி..

By Thanalakshmi VFirst Published Jan 2, 2022, 2:32 PM IST
Highlights

காவல்துறையினர் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் பழக வேண்டும் என்றும் கண்ணியம் குறையாமல் ஒவ்வொரு அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றும் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு புத்தாண்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும், சட்டம்- ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திரபாபு அனைத்து தமிழக காவல்துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், " 2021-ம் ஆண்டு பல்வேறு சவால்களை தமிழக காவல்துறை வழக்கம் போல் தைரியமாக எதிர்கொண்டது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடத்தி முடித்துள்ளோம்.

சட்டம் ஒழுங்கு திறம்பட பேணி காக்கப்பட்டது, குற்றப்புலனாய்வு மெச்சத்தகும் வகையில் இருந்தது, இவை அனைத்திற்கும் காரணம் காவல்துறையில் உள்ள அதிகாரிகள், ஆண், பெண் காவலர்கள் தான். இவர்களின் அர்ப்பணிப்பு அனைத்து சூழ்நிலையிலும் அரண்போல நின்றதாலேயே சாத்தியமானது. தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதி தொடர்பான கொலைகளில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதைபோல சாதி அரக்கனின் பெயரால் நடந்த கொலைகளில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடதமிழகத்தில் பழிக்குபழி வாங்கும் ரவுடிகளின் அட்டகாசத்தை "ஆபரேசன் ரவுடி வேட்டை" என்ற பெயரில் ஒடுக்கி வருகிறோம். 

அதன் விளைவாக தமிழகம் முழுவதும் கடந்த 2021-ல் 3325 ரவுடிகளை கைது செய்துள்ளோம். 1117 அபாயகரமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். போதைப்பொருளுக்கு எதிராக "drive against drugs (DAD)" என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்துள்ளோம். 2-வது அலையில் மட்டும் கொரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு 139 காவல்துறையினரை இழந்துள்ளோம். இத்தகைய கடினமான பணி சூழலில் தமிழக அரசு காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கியும், காவல்துறையினரின் தங்கும் குடியிருப்பை 750 சதுர அடியாக உயர்த்தியும், காவல்துறையினரின் துறைரீதியிலான நடவடிக்கைகளை ரத்து செய்தும் உத்தரவிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

காவல்துறையினரின் 1067 வாரிசுகளுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிபெற்று கொடுக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையின் பேரில் 1500 பேருக்கு காவல்துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி நிறைந்த இந்த காலகட்டத்தில் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டுள்ள 989 காவல் உதவி ஆய்வாளர்கள், 10 ஆயிரம் காவலர்கள் காவல்துறையின் அடையாளத்தை மேம்படுத்துவார்கள். அதைபோல பொதுமக்களிடம் மனித நேயத்துடன் பழகுவார்கள் என நம்புகிறேன்.

பொதுமக்களின் மத்தியில் சில காவல்துறையிரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, குறிப்பாக விசாரணையின் போது நடக்கும் வன்முறைகள் வருத்தமளிக்கிறது. நடந்த குற்றங்களில் வழக்குப்பதிவு செய்யவில்லை என புகார்கள் வருகிறது. முழுமையான ஒருமைப்பாடு, தனிப்பட்ட தைரியம், கண்டிப்பான முகம் மற்றும் தொழில் ஒழுக்கம், நெறிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்மாதிரியாக வழிநடத்துவது ஒவ்வொரு பிரிவு அதிகாரியின் பொறுப்பாகும். தமிழக காவல்துறையின் கண்ணியம் குறையும் வகையில் அதிகாரிகள் ஒருவரும் செயல்படக்கூடாது.

இந்தாண்டு கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்பது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், சாலை விபத்துகள், சைபர் கிரைம் குற்றங்கள் போன்றவை குறிப்பிட்ட சவாலாக இருக்கும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம், காவல்துறையினருக்கு எதிராக தவறான பரப்புரைகளுக்கு எதிராக செயல்படுவோம். இதயத்தில் எந்தக் கெடுதலும் இன்றி, நமது திறமையினாலும் அறிவினாலும் போரிடுவோம். எல்லா இடங்களிலும் எப்போதும் அமைதி மற்றும் அமைதியை உறுதிப்படுத்தும் எங்கள் பணிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தமிழ்நாடு காவல்துறைக்கு தலைமை தாங்குவது பெருமைக்குரியது. புத்தாண்டு தற்சமயம் நிறைய எதிர்பார்ப்புகளோடும், மகத்தான நம்பிக்கையோடும்
எதிர்கொள்வோம்" என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

click me!