Annapoorani : செத்துப்போன அரசுக்கு அபூ சிலை வைத்தது ஏன்? அம்மா அன்னபூரணியின் அட்ரா சக்க அப்டேட்ஸ் சீசன் – 2

By Raghupati RFirst Published Jan 2, 2022, 2:12 PM IST
Highlights

வலிமை டிரைலரையெல்லாம் ‘சைடுல ஓடிப்போயிடு’ எனுமளவுக்கு தமிழ்நாட்டை கடந்த ஒரு வாரமாக வெச்சு செஞ்சு கொண்டிருக்கிறார் அம்மணி சாமியான ‘அன்னபூரணி’. 

பேப்பர், சேனல்கள், ஆன்லைன் மீடியா என எங்குட்டு திரும்புனாலும் அங்கே அபூ!வின் (அட, அன்னபூரணிதானுங்க) ஆலாபனைகள்தான். மீடியா ரவுண்டு கட்டி அடிக்க அடிக்க அவரது டிரெண்டிங் ரேட் எகிறிக் கொண்டே இருக்கிறது. ஒமைக்ரான் லாக்டவுனுக்குள் சிக்கி சின்னாபின்னமாகும் முன்பாக மக்களும் பாவம் கொஞ்சம் சிரிக்கட்டுமே! என்று காவல்துறையும் அபூ!வை ஆடவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது. 

வலிமை அப்டேட்ஸை விட அன்னபூரணி அப்டேட்ஸுக்குதான் இன்னைக்கு செம்ம மவுசு. நமது இணையதளம் ஆங்காங்கே சோர்ஸ்களில் சேகரித்து ஏற்கனவே அவரைப் பற்றி ஒரு அப்டேட் சீசனை ஓட்டிவிட்ட நிலையில், இதோ ரெண்டாவது சீசன்….

ஏழை குடும்பத்தின் கடைசி பொண்ணு, இரண்டாம் தார வாழ்க்கை, சென்னைக்கு மாறுதல், ஆண் நண்பர்கள் அலப்பரை, இன்டீரியர் டெக்னீஸியன்  அரசுவுடன் ஓவர் நெருக்கம், குடும்ப பஞ்சாயத்து, கணவனை பிரிதல், அரசுவுடன் சென்னையில் செட்டிலாகுதல், பங்காரு மகன் செந்தில்குமாரின் நட்பு மற்றும் மேற்பார்வை வட்டத்துக்குள் வந்து பிரபலமாதல் !  இவைதான் அன்னபூரணியின் துவக்க கால வாழ்க்கை ஹைலைட்ஸ்.

இயற்கை ஒளி அறக்கட்டளையின் மூலம் மன நல ஆலோசனை தருவதாக சொல்லி அன்னபூரணியும், அரசுவும் நடத்திய மெகா வசூல் பணத்தைப் பிரித்துக் கொள்வதில் இருவருக்குமிடையில் எக்கச்சக்க சண்டையாகி பிரிந்தனர்.  இதனால் அபூவின் சோஷியல் மீடியா பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த ரோகித், திடீர் ப்ரமோஷனாகி அரசுவின் இடத்தில் அமர்த்தப்பட்டு, அன்னபூரணியுடன் கைகோர்த்தார். 

ரோகித்துடனான அவரது வாழ்க்கை கணவன் – மனைவி ரேஞ்சுக்கு! என்று கொளுத்திப் போடுது அவர்களை அறிந்த கூட்டம்.  2019ல் திடீரென அரசு மரணமடைகிறார். அவரது மரணம், இப்போது வரையில் மர்மமாகதான் இருக்கிறது. இருந்தாலும் அதை யாரும் சிக்கலாக்கிவிட கூடாது என்பதற்காக அரசுக்கு ஒரு சிலை வைத்து, தன் விஸ்வாசத்தை காட்டிவிட்டார் அபூ! என்கிறார்கள். 

சென்னை, காஞ்சி, திண்டிவணம், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் மண்டபங்களை வாடகைக்கு எடுத்து, ‘அன்னபூரணி அம்மா அருளாசி’ என்று பிரசாரம் செய்து பலி ஆடுகளை! ஸாரி…ஆட்களை ஈர்த்துள்ளனர். மக்களை முதலில் நம்ப வைப்பதற்காக இவர்களே சிலரை காசு கொடுத்து பக்தர்கள் போல் செட்-அப் செய்து, அபூவின் காலில் விழ வைத்து, ‘அம்மா உங்க அருளாசி கிடைச்ச பிறகு எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைச்சிடுச்சு! பிஸ்னஸ் சக்ஸஸ் ஆகிடுச்சு! நோய் தீர்ந்துடுச்சு!’ என்று நடிக்க வைத்துள்ளனர். கண் முன்னே ஒரு குடும்பமே அழுது புரண்டு அபூவுக்கு நன்றி சொல்வதைப் பார்த்து, பல நூறு குடும்பங்கள் அவரை நம்ப துவங்கியுள்ளனர். விளைவு, லட்சம்  லட்சமாய் கொட்டியிருக்கிறது வசூல். 

ஆனால் அங்கே நடத்தி, இங்கே நடத்தி கடைசியில் செங்கல்பட்டு எல்லைக்குள்ளேயே அருளாசி விளையாட்டை இவர்கள் ஆரம்பித்ததும் தான் அங்கே ஏற்கனவே செட்டிலாகியிருந்த பங்காரு டீமுக்கு செம்ம காண்டாகியுள்ளது. அதன் விளைவுகள் என்னென்ன? என்பதை சீசன் 3-யில் பார்ப்போம்.  எத்தனை சீசன் நீண்டாலும் அன்னபூரணியால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது !

click me!