பள்ளி மாணவர்கள் பேருந்தில் தொங்கி கொண்டு போவது இன்றளவும் தொடர்கதையாகி வருகிறது.
மாணவர்களின் எதிர்கால கல்வியை மனதில் கொண்டு பள்ளிக்கூடங்களை திறந்திருக்கிறது அரசு. கொரோனா காலத்தில் இது ரிஸ்க் எடுக்கும் சமாச்சாரம் தான் என்பதில்சந்தேகம் ஏத்துவமில்லை. இருந்த போதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி வருவதைக் காணமுடிகிறது.
பள்ளிக்கு வரும் மாணவர்கள், சரியாக பள்ளிக்கு வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். காரணம் என்னவென்றால், நகரங்களில் இருக்கும் அளவுக்கு, கிராமங்களில் அரசு பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக பள்ளி செல்லும் நேரங்களில் பேருந்துகள் அதிகளவில் இயக்க வேண்டும். இன்றளவும் மாணவர்கள் பேருந்துகளில் தொங்கி கொண்டே செல்கின்றனர்.
போதிய பேருந்து வசதியின்றி தவிக்கும் கிராமத்து மாணவர்கள், பள்ளிக்கூடம் செல்ல உயிரைப் பணையம் வைக்க வேண்டியதாக உள்ளது. பேருந்துகளின் டாப் மற்றும் ஏணிப்படிகளில் தொற்றிக் கொண்டு பள்ளிக்கூடம் செல்கிறார்கள். உதாரணத்துக்கு தேனி மாவட்டம், ராயப்பன்பட்டியிலிருந்து கம்பம் செல்லும் பேருந்தில் மாணவர்கள் தொங்கி கொண்டு செல்கிறார்கள். இந்த படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்குமட்டுமல்லாது, தமிழகத்தில் கிராமங்கள் பலவற்றில் இப்படித்தான் நிலைமை உள்ளது.தமிழக அரசு மாணவர்களுக்கு இலவச பயண அட்டை வழங்கியுள்ளதால் கிராம பகுதி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அதிகம் பயணிக்கிறார்கள்.பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களின் உயிர்க்கு முக்கியத்துவம் தந்து, பள்ளிக்கூட நேரத்தில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழக அரசிற்கு பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.