விஜய் பக்கம் சாய்ந்த அதிமுக சீனியர்! தவெக-வில் இணைந்த எம்ஜிஆர் காலத்து விசுவாசி ஜே.சி.டி. பிரபாகர்

Published : Jan 02, 2026, 07:47 PM IST
JCD Prabhakar joins TVK Vijay

சுருக்கம்

அதிமுகவின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆரின் நெருங்கிய ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். இந்த நிகழ்வு, மேலும் பல கட்சித் தலைவர்கள் தவெகவில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜே.சி.டி. பிரபாகர் இன்று அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்தார்.

சென்னையில் உள்ள த.வெ.க தலைவர் விஜய் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

யார் இந்த ஜே.சி.டி. பிரபாகர்?

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1980-லேயே வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார்.

1980 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவின் போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கியப் பங்கு வகித்தவர். அதிமுகவை ஒன்றிணைக்கும் நோக்கில் அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவதில் முக்கியமானவராக இருந்தார்.

தவெகவில் இணைந்த மகன்

சில நாட்களுக்கு முன்பே ஜே.சி.டி. பிரபாகரின் மகன் அமலன் த.வெ.க-வில் இணைந்திருந்தார். அப்போதே பிரபாகரும் கட்சி மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அது உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அவர், "இன்னும் பல முன்னாள் அமைச்சர்கள் வருவார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையில் இந்த சேர்க்கை அமைந்துள்ளது.

முக்கியத் தகவல்

இம்மாத இறுதிக்குள் மேலும் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் த.வெ.க-வில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான விரிவான ஏற்பாடுகளை அக்கட்சியின் தலைமை தீவிரமாகச் செய்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தனது கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதால், வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!
பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு