
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக, அதிமுக என பெரிய கட்சிகள் மட்டுமின்றி சிறிய கட்சிகள் கூட தயாராகி வருகின்றன. ஆனால் இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட, நாட்டில் அதிக முறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி உட்கட்சி பூசலை தீர்க்க கடுமையாக போராடி வருகிறது. ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரசீன் சக்கரவர்த்தி தமிழக அரசை விமர்சித்ததை தொடர்ந்து தமிழக காங்கிரஸில் உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை உள்ளிட்ட ஒரு தரப்பினர் திமுக அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் சைலண்ட்டாக பிரசீன் சக்கரவர்த்தி கருத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக காங்கிரசின் உட்கட்சி பூசலால் கட்சி அழிவுப்பாதையில் சென்று வருவதாக ஜோதிமணி எம்.பி வெளிப்படையாகவே ஆதங்கத்தை கொட்டி விட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினருமான சூர்ய பிரகாசம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் செல்வபெருந்தகை காங்கிரசை திமுகவிடம் அடகுவைத்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக சூர்ய பிரகாசம் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க. வின் அடிமைகள் கூடாரமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மாற்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தீவிர முயற்சி செய்கிறார். தமிழக அரசின் கடன் சுமை 10 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்பதை தி.மு.க அரசே தன்னுடைய 2025 பட்ஜெட் அறிக்கையில் ஒத்து கொண்டுள்ளது.
காங்கிரஸ் தொண்டர்களை அவமானப்படுத்தும் செல்வபெருந்தகை
இதை மறந்து பிரவின் சக்கரவர்த்தி உண்மைக்கு மாறாக தி.மு.க அரசின் மீது பழி போடுவதாக அவர் மீது வசைபாடி, வரும் தேர்தலில வெகுஜன தி.மு.க எதிர்ப்பினால் படு தோல்வி அடைய போகும் தி.மு.க வோடு சேர்ந்து காங்கிரசும் படுதோல்வி அடையாமல் இருக்கவும், தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழக வாக்காளர்களிடம் வீசும் விஜய் ஆதரவு பேரலையை மற்றும் பிரகாசாமான வெற்றி வாய்பை கருத்தில் கொண்டு, த.வெ.க வோடு தேர்தல் கூட்டணி அமைத்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற காங்கிரசாரின் நீண்ட கால கனவை நனவாக்க போராடும் காங்கிரஸ் தொண்டர்களை தற்குறிகள் என்று செல்வபெருந்தகை கூறி வெளிப்படையாக அவமானப்படுத்துகிறார்.
சுயமரியாதை இடம் கொடுக்கவில்லை
இதனால் செல்வபெருந்தகை தலைமையின் கீழ் வேலை செய்ய என் சுயமரியாதை இடம் கொடுக்காததால் இன்று முதல் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்துவது மட்டும் அல்லாமல் காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பதவியிலும் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.