
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்ற உண்மையை மறைக்கும் வகையில், பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து அவரது பெயரையும், புகைப்படத்தையும் நீக்கியுள்ள திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாவது:
“1981-ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காகத் தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் எம்.ஜி.ஆர். ஆனால், தற்போது அந்தப் பல்கலைக்கழக இணையதளத்தில் 'யார் நிறுவினார்' என்ற பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது. 53 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவினருக்கு எம்.ஜி.ஆர் மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றும் மாறவில்லை என்பதை இது காட்டுகிறது.
தமிழை வைத்துப் பிழைப்பு நடத்தி வரும் கருணாநிதியின் பெயரை கழிவறை முதல் காவாங்கரை வரை வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் பெயரையும் படத்தையும் நீக்குவது அவரது மமதையின் உச்சம்" என்று எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
"சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று நினைப்பது போல, இணையதளத்தில் இருந்து படத்தை நீக்கிவிட்டால் எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிட முடியாது. அவரை மக்கள் இதயத்தில் வைத்துத் தெய்வமாகக் கும்பிடுகிறார்கள்" என்றும் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
“புரட்சித் தலைவரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் வரலாற்றில் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம். திமுக அரசு இந்த வன்மத்தைக் கைவிட்டு, உடனடியாக இணையதளத்தில் எம்.ஜி.ஆரின் பெயரைப் பதிவேற்ற வேண்டும்” என்றும் இல்லையெனில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.