
திமுக சார்பில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிரணி மாநாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த டிசம்பர் 29ம் தேதி நடந்தது. திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட திமுக பெண் நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பலவீனமான கொங்கு மண்டலத்தின் வாக்குகளை குறி வைத்து திமுக முதலில் இளைஞரணி மாநாட்டை நடத்தியது. இதனத்தொடர்ந்து பல்லடத்தில் மகளிர் அணி மாநாட்டை நடத்தியது. மகளிர் உரிமைத் தொகை, பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட திட்டங்களால் திமுக அரசுக்கு பெண்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் நிலையில், பெண்களின் வாக்குகளுக்கு டார்கெட் செய்து திமுக மகளிரணி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியது.
இந்த நிலையில், வரும் 19ம் தேதி (திங்கட்கிழமை) தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற தலைப்பில் திமுக டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது. கனிமொழி முன்னிலையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொங்கு பெண்களின் வாக்குகளுக்கு குறி
பல்லடத்தை போன்று தஞ்சாவூர் செங்கிப்பட்டி திமுக மகளிரணி மாநாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மகளிர் மாநாட்டில் கொங்கு மண்டல பெண்களுக்கு திமுக குறிவைத்த நிலையில், தஞ்சாவூர் மாநாட்டில் டெல்டா மண்டல பெண்களின் வாக்குகளுக்கு திமுக குறிவைத்துள்ளது. கொங்குவை ஒப்பிடும்போது டெல்டாவில் திமுகவுக்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. அதை விட கூடுதல் வாக்குகளை டார்கெட் செய்து தஞ்சாவூர் மாநாட்டையும் திமுக பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. திமுகவின் மகளிரணி மாநாடுகள் பெண்களின் வாக்குகளை முழுமையாக அள்ளுமா? என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.