இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்.... விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

By Manikanda Prabu  |  First Published Dec 29, 2023, 7:04 PM IST

தேமுதிக நிறுவன தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது


தேமுதிக நிறுவன தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பிய அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார்.

இதனிடையே, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி, டிசம்பர் 28ஆம் தேதி (நேற்று) காலமானார். அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டதை தொடர்ந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர். இதனால் கோயம்பேடு ஸ்தம்பித்தது.

Tap to resize

Latest Videos

அதன் தொடர்ச்சியாக, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, விஜயகாந்தின் உடல் இன்று மாலை தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.

மீளா துயில் கொள்ளப்போகும் கேப்டன்.. சந்தனப்பேழையில் இடம் பெற்று இருக்கும் வாசகங்கள் என்ன?

அதன்படி, தீவுத்திடலில் இருந்து தேமுதிக அலுவலகத்துக்கு விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்ட விஜயகாந்தின் உடல் அவர் நிரந்தரமாக துயில் கொள்ளவுள்ள சந்தனப்பேழையில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் இறுதி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, 72 குண்டுகள் முழங்க விஜயகாந்தின் உடலுக்குஅரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, அவரது குடும்ப சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன. கண்ணீர் மல்க அவரது மகன்கள் இறுதி சடங்குகளை செய்தனர். தொடர்ந்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் எப்போதும் அணிந்திருக்கும் தங்கச் செயின், மோதிரம், கண்ணாடி அணிந்தே சந்தனப்பேழைக்குள் வைத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்பதால், சாலைகளில், மேம்பாலங்களில் திரண்டிருந்த பொதுமக்கள் செல்போன் டார்ச் ஒளி மூலம் கேப்டன் விஜயகாந்துக்கு பிரியாவிடை கொடுத்தனர்.

ஏழைகள் வாழ நீ செய்த யாகம்... என்னென்ன என்று எங்கே சொல்வேன்... அன்பாலே சேர்ந்த நெஞ்சங்கள் வாழ... நீ செய்த தியாகம் எங்கே சொல்வேன்.. இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில்... அன்புக்கும் பண்புக்கும் நீ அந்த சொர்க்கத்தில்... மன்னவன் காவிய நாயகனே... என்னுயிர் தேசத்து காவலனே...வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன் புகழ் வாழியவே...!

click me!