
கேரளாவில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் நிதியுதவி போதாது என்றும் அதனை அதிகரித்து வழங்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நீட் தேர்வு எழுத, மகனுடன் கேரளத்துக்கு அழைத்து சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை கிருஷ்ணசாமி, மாரடைப்பால் உயிரிழந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார்.
தேர்வு எழுதிய பின்னர் வெளியே வந்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கம், அப்பா எங்கே என்று கேட்டுள்ளார். இதனை அடுத்து, அங்கிருந்த போலீசார் மாணவனை அழைத்துக் கொண்டு எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மருத்துவமனை சென்ற மாணவன், தந்தை உயிரற்ற சடலமாய் இருப்பதைப் பார்த்து கதறி அழுதார். இதன் பின்னர், கிருஷ்ணசாமியின் உடல் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்சில் கிருஷ்ணசாமியின் உடல், அவரது சொந்த ஊருக்கு புறப்பட்டது. இன்று இரவு 11 மணியளவில் சென்றடையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணசாமியின் உயிரிழப்புக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், கஸ்தூரி மகாலிங்கத்தின் முழு கல்வி செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு தமிழக அரசு அறிவித்த 3 லட்சம் ரூபாய் போதாது என்றும் நிதியுதவி தொகை அதிகரிக்க வேண்டும என்று கூறியுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.