
மதுரையில் நீட் வினாத்தாள் இந்தியில் வழங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மதுரையில் நடந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1 மணிக்கு நிறைவு பெற்றது. 13 லட்சத்து 26 ஆயிரத்து 725 பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்தியா முழுவதும் மொத்தம் 2,255 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் 170 மையங்களில் 24,720 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கேரள, கர்நாடக, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் தேர்வை எழுதினர்.
வினாத்தாள் அவரவர் தாய்மொழியில் கேட்கப்படும் என்பது விதியாகும். இந்த நிலையில் மதுரை நரிமேட்டில் இந்தியில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வினாத்தாள் வேண்டும் என்று கேட்டிருந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் இந்தி மொழியில் இருந்துள்ளது. இதனைக் கண்ட மாணவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் தெரியப்படுத்தியதை அடுத்து, 24 மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர். மீதமுள்ள 96 மாணவர்களுக்கு தேர்வு மையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.
இதன் பின்னர், அவர்களுக்கு மதிய உணவு வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 96 பேரும் தற்போது தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கேள்வித்தாள் குளறுபடியை அடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.