
ஜோசப் விஜய்யை நினைவிருக்கிறதா?.... தீபாவளி சமயத்தில் பட்டாசை விட இவருக்கான ஆதரவு குரல்தான் வெடி வெடியென வெடித்தது. ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. மக்களை நசுக்குவதாக இவர் வீர வசனம் பேசியிருக்க, அந்த காட்சிகளை வெட்டி வீசிட சொல்லி டெல்லி நெருக்கடி கொடுக்க, ஜோசப்போ ‘ஆஹா கருத்துரிமைக்கு வந்த சோதனையை பாரீர்!’ என்று முழக்கமிட, அதற்கு ஆதரவாக அந்த விவகாரத்தை வைத்து இங்கே பல கட்சிகள் அரசியல் பஞ்சாமிர்தம் கிண்ட என்று ஒரே அமளி துமளியாய் இருந்தது.
‘நான் துணிந்து பேசியதெல்லாம் மக்களின் நலனுக்காகத்தான்’ என்று இந்த போராட்டத்தின் இறுதியில் பேசியிருந்தார் ஜோசப் விஜய்.
பாரேன் இந்த புள்ளைக்கு நாட்டு மக்கள் மேலே எம்புட்டு கரிசனம்? என்று நெகிழ்ந்தது தமிழ்நாடு. சரி அந்த விஷயத்துக்கென்ன இப்போ? என்று கேட்டால் கொஞ்சம் கீழே இறங்கி படியுங்க ப்ரோ அண்டு சிசீஸ்...
மூன்று நாட்களாக அடை மழையில் சென்னை மிதப்பதும், மூழ்குவதுமாய் இருக்கிறது. இன்ஸ்பெக்டரே இறங்கி வந்து காவாய் அடைப்பை க்ளியர் பண்ணுமளவுக்கு பொது நல சேவை தேவைப்படுகிறது. பல இடங்களில் மக்கள் வீடிழந்து, பொருட்கள் இழந்து பரிதவித்துக் கிடக்கிறார்கள்.
இந்த சூழலில் ஜோசப் விஜய், தனது வீட்டில் ‘மெர்சல்’ பட வெற்றிக்காக பார்ட்டி கொடுத்திருக்கிறார். அட்லி, எஸ்.ஜே.சூர்யா, விஜய் என்று எல்லோரும் கூடி நின்று செல்ஃபி எடுத்து கொண்டாடும் போட்டோ இணையதளத்தில் உலா வந்து சென்னைவாசிகளை செம டென்ஷனாக்கி இருக்கிறது.
இதில் யாராலுமே நம்ப முடியாத அதிர்ச்சி, அமைதிப்புயலான இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இதில் கலந்து நிற்பதுதான். ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என்று அடக்கம் காட்டும் நம்ம ஏ.ஆர்.ஆரா இப்படி என்று அதிர்கிறது தமிழகம்.
இந்த போட்டோவும், பார்ட்டி விவகாரமும் பட்டி தொட்டியெல்லாம் வைரலாகி ஆளாளுக்கு காண்டாக ஆக துவங்கியிருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கை விஜய் வீட்டில் ‘உற்சாக’ பார்ட்டி என்று சூசகமாய் போட்டு சூடேற்றியிருப்பதால் நிலவரம் கலவரமாகி கிடக்கிறது.
இதனால் ‘பாஸ் இந்த பார்ட்டி இப்போ நடந்தததில்லை, மழைக்கு முன்னாடியே நடந்தது. வேணும்னு இப்போ விஷமம் பண்றாங்க.’ என்று ஜோசப் விஜய் தரப்பிலிருந்து பதில் வருகிறது. எது நெசமென்று கர்த்தருக்கே வெளிச்சம்!