
கடந்த 2 நாட்களில் இருந்த அச்சம்போல் யாரும் மனதில் கொள்ளாமல், வார இறுதிவிடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் என தி தமிழ்நாடு வெதர்மேன் வடகிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை வலுத்து வருகிறது. பருவமழை தொடங்கியபின், முதல்முறையாக வேலூர் , திருவண்ணாமலை பகுதியில் முதல்மழை பெய்கிறது. சென்னையைப் பொருத்தவரை மிகப்பெரிய அளவுக்கு மழை இல்லை. இடைவெளிவிட்டு, குறுகிய நேரமே மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களில் இருந்த அச்சம்போல் யாரும் மனதில் கொள்ளாமல், வார இறுதிவிடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.
நான் காலையில் பதிவு செய்து இருந்ததைப் போல், வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்ய உள்ளது. இந்த பருவமழையில் முதல் முறையாக மேகக்கூட்டங்கள் உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து, ஒன்று சேர்கின்றன. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ளார்ந்த பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை பகுதிகளில் வடகிழக்கு பருவமழையின் முதல் மழையை இன்று எதிர்பார்க்கலாம். விழுப்புரம் மாவட்டத்திலும் மழை இருக்கும். தென் சென்னையிலும் இப்போது இருந்து, அவ்வப்போது திடீர், திடீரென குறுகிய நேரம் மட்டுமே மழை பெய்யும்.
நாகை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. வீராணம் ஏரி விரைவாக நிறைந்துவிடும். பல மணிநேரமாகமழை பெய்துவருகிறது. விடாது பெய்யும் அடைமழை சிறப்பு.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி நாகை மாவட்டத்தில் பெய்த மழை விவரம் வருமாறு-
தலைஞாயிறு- 270 மி.மீ
திருப்பூண்டி- 241 மி.மீ
வேதராண்யம்- 160 மி.மீ
மயிலாடுதுறை- 107 மி.மீ
சீர்காழி- 106 மி.மீ
கொள்ளிடம்- 94 மி.மீ
நாகை- 93 மி.மீ
திருவாரூர், திருத்துறைப்பூண்டி- 127 மி.மீ
இவ்வாறு தனது பதிவில் கூறியுள்ளார்.