
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் தவெகவுக்கு ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்பதில் விஜய் உறுதியாக உள்ளார். விஜய் மீது நம்பிக்கை வைத்து தவெகவில் இளைஞர்கள் மட்டுமின்றி மூத்த அரசியல்வாதிகளும் இணைந்து வருகின்றனர்.
அரசியல் 50 ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சிறந்த பேச்சாளரான நாஞ்சித் சம்பத் ஆகியோர் தவெகவில் இணைந்தார். மேலும் பிரபல பத்திரிகையாளரான பெலிக்ஸ் ஜெரால்டும் இன்று தவெகவில் இணைந்திருந்தார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஜே.சி.டி பிரபாகர் மகன் அமலன் தவெகவில் இன்று இணைந்துள்ளார்.
எம்ஜிஆர் காலத்தில் இருந்து அரசியலில் இருந்து வரும் ஜே.சி.டி.பிரபாகரன். அதிமுக-வில் அமைப்புச் செயலாளராக இருந்து வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ்ஸுடன் இணைந்திருந்த அவர் அதிமுகவை ஒன்றிணைக்க முயற்சி எடுத்து வந்தார். ஆனால் அது முடியாமல் போனதால் இப்போது அரசியலில் இருந்து ஒதுங்கி வருகிறார்.
அரசியல் விமர்சகரும் தவெகவில் இணைந்தார்
இந்த நிலையில், அவரது மகன் அமலன் விஜய்யை சந்தித்து தவெகவில் இணைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. மேலும் அரசியல் விமர்சகர் அனந்தஜித் என்பவரும் இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து தொடர்ந்து பலர் குறிப்பாக இளைஞர்கள் தவெகவுக்கு தாவி வருவது குறிப்பிடத்தக்கது. விஜய்யின் கட்சியில் தொடர்ந்து இளைஞர்கள் சாரை சாரையாக இணைந்து வருவது திராவிட கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.