
மாண்புமிகு தமிழ்நாடு மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டி ஆகிய தொல்லியல் தளங்களில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் அண்மைக்காலத்தில் அறிவியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட அரிய தொல்பொருட்களை உலகத்தமிழர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கண்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி அருகே 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தினை இன்று (20.12.2025) திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையைப் பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின் தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின் துறைமுகமான கொற்கை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற அரிய தொல்பொருட்களை ஒரே இடத்தில் பொருநை ஆற்றங்கரை நாகரிகம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் சிறப்பாக தொல்பொருட்களை காட்சிப்படுத்தி நவீன வசதிகளோடு அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். பின்னர், பொருநை அருங்காட்சியகத்தின் அறிமுக கட்டடம், சிவகளை காட்சி அரங்கில் இரும்பின் தொன்மை காட்சிக்கூடம், முதுமக்கள் தாழி காட்சிக்கூடம், வாழ்விட பகுதி காட்சிக்கூடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் பார்வையிட்டார்.
பொருநை அருங்காட்சியக வளாகத்தில் அறிமுகக்கூடம், சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆகிய கட்டடத் தொகுதிகள் 54,296 சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டடத் தொகுதிகளும் முற்றம், தாழ்வாரம் போன்றவற்றுடன் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என்ற வகையில் இப்பகுதியின் கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இக்கட்டடத்தின் முகப்புகளிலும் உட்பகுதிகளிலும் உள்ளூர் கவின்கலைகள் மிளிர்கின்றன.
இவற்றுடன் கண்கவர் நீர்த்தடாகம், நிகழ்த்து கலைகளைக் காணும் திறந்தவெளி அரங்கம், தொல்லியல் மாதிரிகள் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்களின் விற்பனையகம், மின்கலத்தால் இயங்கும் வாகனம், பொதுமக்கள் செல்ல எளிதான நடைபாதை, இயற்கையை ரசிக்க ஆங்காங்கே மரங்கள், குறுஞ்செடிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இளைப்பாற ஆங்காங்கே இருக்கைளும் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் தொன்மையை அறிய அறிவியலோடும், இயற்கையோடும் இணைந்து அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.