
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக நிதின் நவீன் கடந்த திங்கள் கிழமை டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தலைவராக பொறுப்பேற்றது முதல் மாநில வாரியாக கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு நிதின் நவீன் இன்று சென்னை வந்தார். கட்சியின் தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றப்பின் அவர் முதல் முறையாக வருவதைத் தொடர்ந்து அவருக்கு கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வரவேற்பு அளித்தனர்.
தேசிய செயல் தலைவரை வரவேற்க மாநில மூத்த நிர்வாகிகளான நயினார் நாகேந்திரன், எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், கரு.நாகராஜன், குஷ்பு மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக நிதின் நவீன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சென்னைக்கு வந்தபோது எனக்குக் கிடைத்த அன்பான வரவேற்பைக் கண்டு மனம் மகிழ்ந்தேன். தமிழக பாஜகவின் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.