குடியரசுத் தலைவர் வேட்பாளராக கிறிஸ்தவரா..? திருமாவளவன் தகவலால் சூடு பிடிக்கும் தேர்தல் களம்

By Ajmal KhanFirst Published Jun 14, 2022, 10:51 AM IST
Highlights

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக 'கிறித்தவர் ஒருவரை'  நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

ஜூலை 18- குடியரசு தலைவர் தேர்தல்

குடியரசு தலைவர் பதவி நாட்டின் உயரிய பதவியாகும் இந்த பதிவியில் பல தலைவர்கள் அலங்கரித்துள்ளனர். இந்தநிலையில் தற்போது குடியரசு தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவி காலம்  அடுத்த மாதத்தோடு நிறைவடைகிறது. இதனையடுத்து  ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் யாரை போட்டியிட வைப்பது என்பது குறித்து பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசித்து வருகிறது. அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ஒரு கிறிஸ்தவர் கூட குடியரசு தலைவராக நியமிக்கப்படவில்லை எனவே எதிர்கட்சி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,  இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறித்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை . தற்போதைய மோடி  அமைச்சரவையில் கிறித்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது. 

பொது வேட்பாளராக கிறிஸ்தவர்

அதைப் பலரும் சுட்டிக் காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2% , கிறித்தவர் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4% மட்டுமே  உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால்  இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும் என தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இநநேரத்தில் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும். பெரும்பான்மைவாத அடிப்படையில் இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தும் பாஜக,  குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்தில்தான் பயன்படுத்தும்.எனவே, எதிர்க்கட்சிகள்  தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

அவசரமாகக் கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம்..! பொதுச் செயலாளர் தேர்வு தொடர்பாக ஆலோசனையா?

click me!