கிராமப் புறங்களில் விர்... சென்னையில் டல்... எல்லாம் விலைவாசிதான்! 

First Published Jan 14, 2018, 5:24 PM IST
Highlights
vegetable prices very low in koyambedu market


பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடந்த சில தினங்களாக கரும்பு, மஞ்சள், காய்கறி, பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றின் வியாபாரம் பரபரப்பாக இருந்தது. குறிப்பாக கிராமப் புறங்களில் எக்கச்சக்க விலைக்கு விற்ற பொருள்கள் எல்லாம் சென்னையில் மிகவும் மலிவாக விற்பனை ஆனது. 

சென்னை கோயம்பேடு சந்தையில் செங்கரும்பு, மஞ்சள், காய்கறிகள் ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டைவிடப் பெரிதும் வீழ்ச்சியடைந்தது. ஆனால், தென்மாவட்ட ஊர்கள், கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விலை அதிகமாக இருந்தது. 

பொங்கல் திருநாளை ஒட்டி கோயம்பேடு சந்தைக்கு 600 லாரிகளில் செங்கரும்புக் கட்டுகள் வந்தன. மதுரை, தேனி, தஞ்சாவூர், கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து செங்கரும்புக் கட்டுகள் வந்தன. இதனால் வழக்கத்தை விட கரும்பு வியாபாரம் அதிகரிக்கும் என்று கருதப் பட்டது. கடந்த ஆண்டு 15 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு அறுநூறு, எழுநூறு ரூபாய் வரை விற்பனையானது. இந்த ஆண்டு பருவ மழை பெய்து செங்கரும்பு நன்கு விளைந்ததாலும், சந்தைக்கு வரத்து அதிகரித்ததாலும் ஒரு கட்டுக் கரும்பு ரூ.300, ரூ.250 என விற்பனையானது. 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு மஞ்சள் குலைகள் ஏராளமாக வந்து இறங்கின. கடந்த ஆண்டு 80 ரூபாய்க்கு விற்பனையான மஞ்சள் குலை இந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விலைபோனது. இஞ்சிக் கொத்து ரூ.50 என விற்பனையானது.

அதே நேரம், நெல்லை, மதுரை, தூத்துக்குடி, குமரி, திருச்சி, கோவை என பிற மாவட்டங்களில் சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.50, 80 என அதிக விலைக்கு விற்பனை செய்யப் பட்டன. அதே போல், மஞ்சள் கிழங்கு குலை ரூ. 40, ரூ.50 மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்யப்  பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்தனர். விளைச்சல் உள்ள இடங்களில் இருந்து சென்னைக்கு வியாபாரத்துக்கு அனுப்பி விட்டு, இங்கே இப்படி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று குறைப் பட்டுக் கொண்டனர். 

காய்கறிகளின் விலையும் கடந்த சில வாரங்களாக இருந்ததைவிட பெருமளவு குறைந்தது. பல்லாரி கிலோ ரூ.45, வெங்காயம் ரூ.70, உருளைக்கிழங்கு ரூ.20, பீன்ஸ் ரூ. 20 என விற்பனையாகின. 

அவரை கிலோ ரூ.20, கேரட் ரூ.40, சௌசௌ ரூ.20, முள்ளங்கி ரூ.15, பீட்ரூட் ரூ.20, கத்தரி ரூ.25, தக்காளி ரூ.12 என விற்பனையாகின. எல்லாப் பொருட்களின் விலையும் குறைந்துள்ள நிலையில் வாழைப்பழத்தின் விலை மட்டும் உயர்ந்துள்ளது. ஒரு குலை ஐந்நூறு ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது.

click me!