
பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் இந்த ஜல்லிக்கட்டுத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று மகிழ்ச்சியாகக் கொண்டாடடப்படுகிறது. வீடுகள் தோறும் புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு அண்டை வீட்டாருடன் பகிர்ந்துகொண்டு கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாளுடன் இணைந்த தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் பல பகுதிகளில் நடைபெறுகின்றன.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. . இதில் 950க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் நடக்கும் இப்போட்டியை அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ., போஸ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக கலெக்டர் வீரராகவ ராவ் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க, வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியதும், காளைகள் துள்ளிகுதித்து சீறிப்பாய்ந்தன. முதலில் கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டது.
அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது. அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள்.
அவனியாபுரத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.
பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல் ஈடுபட்டு உள்ளனர்