கோலாகல ஜல்லிக்கட்டு... காளையரை துவம்சம் செய்த காளைகள் ... 

First Published Jan 14, 2018, 2:51 PM IST
Highlights
madurai avaniyapuram jallikattu responded very well by viewers


மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் களம் இறக்கப்பட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. காளைகள் முட்டியதில் 40 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர் என்றாலும், பெரிய பாதிப்பு ஏதும் இல்லை என்று கூறினார் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்.

மதுரை மாவட்டத்தில் வழக்கம் போல் பொங்கல் உற்சாகம் களை கட்டியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பேர் பெற்ற  முதல் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று காலை அவனியாபுரத்தில் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாவும் தொடங்கியது. ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்றனர். மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் தொடக்கமாக, கோயில் காளைகள் பூஜைக்குரிய விதத்தில் அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. போட்டி தொடங்கிய ஒரு மணி நேரத்தில் 80 காளைகள் களத்தில் இறங்கி, வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்தன. சில இளைஞர்களின் பிடிகளுக்குள் அகப்படாமல் எல்லைக்கோட்டை நோக்கி துள்ளிக் குதித்து ஓடின. வாடி வாசலில் சீறிப் பாய்ந்த  காளைகள் துள்ளிக் குதித்து போக்குக் காட்டியதைக் கண்ட பார்வையாளர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.  

சென்ற வருடத்தை விட இந்த வருடம் போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் கட்டுப்பாடுகள் பல விதிக்கப் பட்டன. இந்த  போட்டியில் 954 காளைகளும் 623 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இதுவரை 40 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அருகிலேயே முதலுதவிக் குழு தயாராக இருப்பதால், அவர்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர்.  இதனிடையே, இந்த வருடம் ஜல்லிக்கட்டால் வீரர்களுக்கு பாதிப்பு அதிகம் இல்லை என்று ஆட்சியர் வீரராகவ ராவ் கூறியுள்ளார். 

click me!