Vegetable price hike : செஞ்சுரி அடித்த காய்கறிகள் விலை… அதிர்ந்துப்போன சென்னை மக்கள்!!

By Narendran SFirst Published Dec 6, 2021, 5:28 PM IST
Highlights

சென்னையில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. 

சென்னையில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதனால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் கனமழை பெய்தது. இந்த தொடா்மழை காரணமாக காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் வரை அனைத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறி வரத்தும் குறைந்தது. விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக கோயம்பேடு சந்தைக்கு தற்போது 50 சதவீதம் வரை காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் தேவை பூர்த்தி ஆகாத நிலையில் அதன் விலை அதிகரித்தது. குறிப்பாக சென்னையில் தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலை வெகுவாக உயா்ந்திருக்கிறது. கோயம்பேடு சந்தைக்கு தினமும் சுமாா் 350 லாரிகள் வரை காய்கறி விற்பனைக்காக வருவது வழக்கம். ஆனால் மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 35 முதல் 45 வாகனங்களில் மட்டுமே தக்காளி கொண்டுவரப்படுகிறது. சென்னைக்கு சுமார் 1100 டன் தக்காளி தேவை என்கிற நிலையில் தற்போது வெறும் 600 டன் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் சென்னையில் தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர், சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 80 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக, தற்போது தக்காளியின் வரத்து, குறைவாக இருப்பதால், விலை அதிகரித்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 45 வாகனங்களில் மட்டுமே தற்போது தக்காளி வரத்து இருப்பதாகவும், இது சென்னையின் தேவையை பூர்த்தி செய்யாது எனவும் தெரிவிக்கின்றனர். இதே போல, பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் 250 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே போல கத்திரிக்காய் கிலோ நூறு ரூபாய்க்கும், வெண்டைக்காய் 80ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அவரைக்காயின் விலையும் நூறு ரூபாயாக அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் காய்கறிகளின் விலை நிச்சயம் குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை (ஒரு கிலோ) நிலவரம் பல்லாரி-ரூ.26 முதல் ரூ.36 வரை, தக்காளி-ரூ.75 முதல் ரூ.90 வரை, உருளைக்கிழங்கு-ரூ.18 முதல் ரூ.28 வரை, சாம்பார் வெங்காயம்-ரூ.45 முதல் ரூ.65 வரை, கேரட்-ரூ.40 முதல் ரூ.75 வரை, பீன்ஸ்-ரூ.80 முதல் ரூ.90 வரை, பீட்ரூட்-ரூ.35 முதல் ரூ.55 வரை, சவ்சவ்-ரூ.22 முதல் ரூ.25 வரை, முள்ளங்கி-ரூ.30 முதல் ரூ.40 வரை, முட்டைக்கோஸ்-ரூ.35 முதல் ரூ.40 வரை, வெண்டைக்காய்-ரூ.60 முதல் ரூ.80 வரை, கத்தரிக்காய்-ரூ.60 முதல் ரூ.90 வரை, பாகற்காய்-ரூ.50, புடலங்காய்-ரூ.60, சுரைக்காய்-ரூ.30, சேனைக்கிழங்கு-ரூ.16 முதல் ரூ.18 வரை, முருங்கைக்காய்-ரூ.150 முதல் ரூ.180 வரை, சேப்பக்கிழங்கு-ரூ.15 முதல் ரூ.25 வரை, காலிபிளவர் (ஒரு பூ)-ரூ.35 முதல் ரூ.40 வரை, வெள்ளரிக்காய்-ரூ.18, பச்சைமிளகாய்-ரூ.30, பட்டாணி- ரூ.50, இஞ்சி-ரூ.30 முதல் ரூ.60 வரை, அவரைக்காய்-ரூ.80 முதல் ரூ.90 வரை, பூசணிக்காய்- ரூ.15, பீர்க்கங்காய்-ரூ.50 முதல் ரூ.60 வரை, நூக்கல்- ரூ.80, கொத்தவரங்காய்- ரூ.50, கோவைக்காய்- ரூ.60, குடைமிளகாய்- ரூ.90, தேங்காய் (காய் ஒன்று) - ரூ.34 முதல் ரூ.36 வரை, வாழைக்காய் (காய் ஒன்று) - ரூ.6-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

click me!