விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
அதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகள் விசிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தொல்.திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றார்.
கோவையில் பிரதமர் மோடி வாகன பேரணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!
எதிர்வரவுள்ள தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், விழுப்புரத்தில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ரவிகுமார் எம்பி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “திமுக கூட்டணியில் விசிகவிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுவுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட உள்ளேன். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.” என்றார்.