கோவையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் வாகன பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக, இரண்டு கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது. பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தொடர்ச்சியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், நடப்பாண்டில் தமிழகத்துக்கு மட்டும் பிரதமர் மோடி இதுவரை 4 முறை வந்துள்ளார். இதில், கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
undefined
அதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வந்துள்ளார். இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வருகிற 18ஆம் தேதி கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த வாகன பேரணியை கோவை கவுண்டம்பாளையம் முதல் ஆர்.எஸ்.புரம் வரை சுமார் 4 கி.மீ. தூரத்திற்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்போது, பிரதமர் மோடி பொதுமக்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ரெய்டுகளுக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள்!
இந்நிலையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, ஏற்கனவே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதை மேற்கோள்காட்டி, கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணிக்கு மாநகர காவல்துறை அனுமதி தர மறுப்பு தெரிவித்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக கோவை காவல்துறை விளக்கம் அளித்தது.
அதன் தொடர்ச்சியாக, கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகன பேரணிக்கு அனுமதி கோரி, கோவை மாவட்ட பாஜக தலைவர் ஜெ.ரமேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கோவையில் வருகிற 18ஆம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாஜகவின் ‘ரோடு ஷோவுக்கு’ அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.