நீட் விலக்கை வலியுறுத்தி, திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று விசிக தலைவர் திருமாவளவன் ஆதரவு அளித்துள்ளார்
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வு பல்வேறு இளம் மாணவர்களின் உயிர்களை காவு வாங்கியுள்ள நிலையிலும், அத்தேர்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அண்மையில், தமிழகம் வந்த குடியரசுத் தலைவரிடம் விரைந்து ஒப்புதல் அளிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுகவின் மாணவரணி, இளைஞரணி, மருத்துவரணி சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 50 நாளில் 50 லட்சம் கையெழுத்து என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், கூட்டணிக்ல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து நீட்டுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்று வருகிறார்.
இலங்கையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோவுக்கு தடை: அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கம்!
அதன்படி, திமுக சார்பில் நீட் விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்தில் விசிக தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டார். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு சென்று திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏக்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து பெற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “அனிதாவில் தொடங்கி இன்று வரை 22 பேர் மரணம் அடைந்தனர். 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 10 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளது. சமூக வலைதளம் மூலமாக மூன்றரை லட்சம் பேர் மற்றும் நேரடியாக ஆறரை லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியான நீட் விலக்கு பெரும்வரை திமுக தொடர்ந்து போராடும்.” என்றார்.
நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்து பிரதிகளை பெற்று அதனை குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் எதிர்ப்புக் களத்தில் முன் வரிசையில் நிற்கிற தமிழ்நாட்டின் குரலாக, - - சார்பில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக, தலைவர் அண்ணன் MP அவர்களை நேரில்… pic.twitter.com/9zy8SGU4aU
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் அரசியல் மட்டுமன்றி - கொள்கை அரசியலிலும், தி.மு.கழகத்துடன் கைகோர்த்து பயணிக்கும் வகையில், நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்ற அண்ணன் திருமா மற்றும் வி.சி.க தோழர்களுக்கு என் அன்பும், நன்றியும்.” என பதிவிட்டுள்ளார்.