வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30 க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வெங்காய விலை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 வாரங்களாக உயர்ந்து வரும் வெங்காயம் தற்போது புதிய உச்சத்தை எட்டி உள்ளது. அதன்படி சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ,100-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வரத்துக்குறைவு, வெங்காய உற்பத்தியில் தாமதம், விநியோக பற்றாக்குறை போன்ற பல காரணங்களால் வெங்காய விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிரது. எனவே வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். பண்டிகை காலத்தை முன்னிட்டு வெங்காய பதுக்கலும் அதிகரிக்கும் என்பதால் டிசம்பர் மாத இறுதிக்குள் ரூ.200 வரை வெங்காய விலை உயரும் என்று கூறப்படுகிறது. எனவே பண்ணை பசுமைக்கடைகளில் குறைந்த விலையில் வெங்காய விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் தமிழக அரசு வெங்காய விலை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பண வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கடந்த 2 வாரங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெங்காய விலை அதிகரித்து வருகிறது. வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சனாதன தர்மம் சர்ச்சை: கடமை தவறிய போலீஸ் - உயர் நீதிமன்றம் கருத்து!
முதலமைச்சரின் உத்தரவுப்படி, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முதல்கட்டமாக நேற்று முதல் சென்னையில் செயல்படும் 10 பண்ணை பசுமை கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை வாகனங்கள் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உள்ளூர் சந்தைகளில் ரூ. 70 வரை ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்படும் நிலையில், சென்னையில் உள்ள பண்ணை பசுமைக்கடைகளில் ரூ.30-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் தேவைக்கேற்ப தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவிலேயே வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.