
விஜய் ஆண்டனிக்கு நல்லவராய் தோன்றும் அன்புச்செழியன் ஆறு மாதங்களுக்கு முன்புவரை சசிகுமாருக்கும் நல்லவர்தான் என கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுப்பிரமணியபுரம் புகழ் சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் அவர் கந்துவட்டிக்கு பணம் வாங்கியதும், மிரட்டல் காரணத்தால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து, திரையுலகினர் பலரும் அசோக்குமாருக்கு ஆதரவாகவும், கந்து வட்டி அன்புச் செழியனுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அன்புச்செழியனுக்கு ஆதரவாக இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது, 6 வருடமாக அன்புச்செழியனிடம் பணம் பெற்றுத்தான் படம் எடுத்து வருகிறேன். என்னிடம் அவர் முறையாகத்தான் நடந்துகொள்கிறார். அன்புச்செழியனை அனைவரும் மிகைப்படுத்தி சித்தரிப்பதாகத் தோன்றுகிறது என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கரு பழனியப்பன் விஜய் ஆண்டனிக்கு நல்லவராய் தோன்றும் அன்புச்செழியன் ஆறு மாதங்களுக்கு முன்புவரை சசிகுமாருக்கும் நல்லவர்தான் என தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் ஆண்டனி, நீங்கள் தொடர்ந்து வெற்றி பெற அதிர்ஷ்டமும் கடனை திருப்பி செலுத்தும் உறுதியும், அன்புச்செழியன் பற்றிய நிலைப்பாடும் மாறாதிருக்க பரம பிதா அருள் பாலிக்கட்டும் என தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.