
அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவிகள் தீபா, சங்கரி, மனிஷா, ரேவதி ஆகியோர் பணப்பாக்கம் அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இன்று காலை முதலே அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர்.
இதையடுத்து மதியம் வீடு திரும்பாததால் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து ராமாபுரம் பகுதியில் விசாரணை நடத்திய போது 4 மாணவிகள் சுற்றி திரிந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், மதியம் 12 மணி அளவில் மாணவிகள் 4 பேர் விவசாய கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மாணவிகளின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தீபா, சங்கரி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 2 மாணவிகளின் உடல்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர் திட்டியதால் தான் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.