வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி வர்க்கீஸ் சிறையில் திடீர் உயிரிழப்பு..! நடந்தது என்ன?

Published : Oct 17, 2025, 11:09 AM IST
varichiyur selvam

சுருக்கம்

Varichiyur Selvam: 2012ம் ஆண்டு திமுக பிரமுகர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த வர்க்கீஸ், திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே மர்மமான முறையில் உயிரிழந்தார். வர்க்கீஸின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு மதுரை மாவட்டத்தை சேர்ந்த திமுக பிரமுகர் கதிரவனை கடத்தி ஓரு கும்பல் பணம் பறித்தது. இந்த கும்பல், திண்டுக்கல்லில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் திண்டுக்கல்லில் ஒரு தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சினோஜ் (32) என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும் அவருடன் இருந்த வரிச்சூர் செல்வம் மற்றும் அஜித், வர்கீஸ் ஆகியோர் அங்கிருந்து தப்பித்தனர்.

பின்னர் இந்த வழக்கில், மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் (57), கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அஜித், எர்ணாகுளத்தை சேர்ந்த வர்க்கீஸ் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த 3 பேர் மீதும், திண்டுக்கல் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கு திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரிச்சியூர் செல்வம், வர்க்கீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

இதையடுத்து கடந்த மாதம் வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் கேரளாவில் வைத்து வர்க்கீசை, திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சிறை காவலர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மறுநாளே வர்க்கீஸ் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!