
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை பல்வேறு மாட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதேபோல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் கிராமத்தில் 5 பெண்கள் அங்கு மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த நிலத்தில் களை எடுத்து கொண்டு இருந்தனர்.
அப்போது மழை பெய்யத் தொடங்கிய நிலையில், திடீரென அவர்கள் அனைவர் மீதும் மின்னல் தாக்கியது. இதில் ராஜேஸ்வரி, சின்னப்பொண்ணு, கணிதா மற்றும் பாரிஜாதம் ஆகிய 4 பெண்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் பத்தியவாடி கிராமத்தில் வயலில் கடலை பறித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரும் மின்னல் தாக்கி பரிதாபமாக பலியாகியுள்ளார். இன்று மட்டும் தமிழகத்தில் 5 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.
விவசாயத் தொழிலாளர்களை காவு வாங்கும் மின்னல்
இந்தியாவில் மின்னல் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மழை பெய்யும்போது திறந்தவெளியில் நிற்கும்போது குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்கள் தான் அதிகம் மின்னலுக்கு பலியாகின்றனர். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது. ஆகவே மழைக்காலங்களில் திறந்தவெளி பகுதிகளில் நிற்பதை பெருமளவில் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.