
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தது முதல் தமிழக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக உள்ளது. தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் விரோதமாக மத்திய அரசு நடந்து வருவதாகவும், கல்வி நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகளை தர மறுப்பதாகவும், ரயில் திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பதாகவும், இந்தி மொழியை வலுக்கட்டாயமாக திணிப்பதாகவும் திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசாக மாற்றியது. தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு பதிலாக ஒன்றிய அரசு என்றே சொல்லி வருகின்றனர். இதற்கிடையே நாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
''முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியை போன்று ஒரு தலைவரைக் காண்பது அரிது. ஒன்றிய அரசு கலைஞர் கருணாநிதிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும். கருணாநிதி திராவிட கொள்கையை முன்னெடுத்து சென்றவர். அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர். ஆட்சி நிர்வாகத்தில் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்'' என்று தமிழச்சி தங்கபாண்டியன் பேசியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் வளர்மதி கேள்வி
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கருணாநிதிக்கு பாரத ரத்னாவுக்கு பதிலாக ஒன்றிய ரத்னா என கேட்டிருக்க வேண்டியதுதானே என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய வளர்மதி, ''கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு என்பது கூட உங்களுக்கு ஒன்றிய அரசு தானே.
பாரத ரத்னாவுக்கு பதில் ஒன்றிய ரத்னா என கேளுங்கள்
உங்களுக்கு தான் பாரதம் என்ற சொல்லே பிடிக்காதே. பாரத ரத்னாவுக்கு பதில் ஒன்றிய ரத்னா என கேட்டிருக்க வேண்டியது தானே. ஒன்றியம், பாரதம் என்ற சொல் உங்களுக்கு கசக்கும். ஆனால் இப்போது பாரத ரத்னா என்ற சொல் மட்டும் இனிக்கிறதா'' என்று தெரிவித்துள்ளார்.