விஜய்யால் வந்த சிக்கல்.. இளைஞர்களுக்கு வலைவீசும் திமுக.. திருவண்ணாமலை மாநாடு சொல்வதென்ன?

Published : Dec 14, 2025, 01:05 PM IST
Tamilnadu

சுருக்கம்

திமுக ஆட்சியில் எவ்வளவு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது? கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன? என்பது குறித்து இளைஞர்களிடம் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள திட்டப்பட உள்ளது.

கோயில் நகரமான திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி மாநாடு இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் ஒன்றரை லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என திமுக எம்.பி.க்கள், அமைச்சர்கள் என அனைவரும் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

திமுக இளைஞரணி மாநாடு

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவுக்கு இந்த இளைஞரணி மாநாடு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட திமுக பெண்கள் மாநாடு, தொண்டர்கள் மாநாடு என நடத்தாத மாநாடுகள் இல்லை. ஆனால் திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டை மற்ற கட்சிகள் திரும்பி பார்க்கும் வகையில் மிக பிரம்மாண்டமாக நடத்துவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

இளைஞர்களின் வாக்குகளையும் கவர வேண்டிய கட்டாயம்

தமிழகத்தில் நீண்ட காலமாக பெண்களை குறி வைத்தே திமுக, அதிமுக என இரண்டு திராவிட கட்சிகளும் தேர்தலை சந்தித்து வருகின்றன. பெண்களுக்கு இலவசங்கள், திட்டங்களை வாரி வழங்கினால் வெற்றி உறுதி என்பது எழுதப்படாத விதி. கடந்த தேர்தலிலும் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை ஆகிய பெண்கள் திட்டங்கள் திமுக வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கின. இந்த முறையும் பெண்களை வழக்கம்போல் திமுக குறிவைத்துள்ள நிலையில், வரும் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளையும் கவர வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

நாம் தமிழர், பாமக

இதற்கு காரணம் என்ன? என்பது உங்களுக்கே தெரியும். சமீபத்திய ஆண்டுகளாக தமிழகத்தில் இளைஞர்கள் அரசியலை உற்றுநோக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஏராளமான இளைஞர்கள் ஆதரவு கொடுத்தனர். இதனால் நாம் தமிழர் தேர்தலில் ஜெயிக்காவிட்டாலும் கணிசமான வாக்கு வங்கியை வைத்துள்ளது. இதேபோல் பாமகவும் ஓரளவு இளைஞர்கள் வாக்கு வங்கியை வைத்துள்ளது.

இளைஞர்களை ஒட்டுமொத்தமாக இழுத்த விஜய்

இவை அனைத்தையும் உடைக்கும்விதமாக விஜய் வந்து சேர்ந்துள்ளார். விஜய்க்கு இளைஞர்கள் மத்தியில் எந்த அளவுக்கு ஆதரவு உள்ளது என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கல்லூரி மாணவர்கள் பெரும்பாலானவர்கள் விஜய் பக்கமே உள்ளனர். அவருக்கு சேரும் கூட்டமே இதற்கு சாட்சி. இதன் காரணமாக இளைஞர்களை தங்கம் வசம் இழுக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது.

திமுகவின் நோக்கம் இதுதான்

இதற்காகத் தான் அண்மையில் சென்னையில் அறிவுத்திருவிழா என்ற மாநாட்டை திமுக நடத்தியது. இதில் பங்கேற்று பேசிய அனைவரும் சொல்லிவைத்தாற்போல் தவெகவையும், அக்கட்சி இளைஞர்களை எப்படி தவறாக வழிநடத்துகிறது என்பதையும் குறிப்பிட்டனர். அதனைத் தொடர்ந்து இப்போது திருவண்ணாமலை இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் நோக்கமே தமிழக இளைஞர்களை திமுகவின் வாக்காளர்களை மாற்றுவதே ஆகும்.

இளைஞரணி நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட்

இதற்காக இளைஞரணி நிர்வாகிகளுக்கு மாநாடு மூலம் திமுக தலைமை அசைன்மெண்ட் கொடுக்கிறது. இளைஞர்களுக்கு திமுக ஆட்சியில் எவ்வளவு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது? கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன திட்டங்கள் உள்ளன? என்பது குறித்து இளைஞர்களிடம் தீவிரமாக பிரசாரம் மேற்கொள்ள திட்டப்பட உள்ளது. மேலும் திமுகவின் கொள்கைகளை கருத்தியல்ரீதியாக இளைஞர்களிடம் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய்க்கு எதிரான கருத்துகள்

மேலும் தமிழகத்தின் உரிமைக்காக திமுக போராடுகிறது என்றும் விஜய் தமிழகத்துக்கு விரோதமான பாஜக பக்கம் நிற்பதாகவும் இளைஞர்களிடம் விளக்கி சொல்ல முடிவெடுக்கப்படுகிறது. மிக முக்கியமாக திமுக, அதிமுக என்றாலே அனுபவ அரசியல்வாதிகளுக்கு, வாரிசு அரசியல்வாதிகளுக்கு தான் போட்டியளிக்க வாய்ப்பு கொடுக்கும் என்பது இளைஞர்கள் மத்தியில் கருத்து உள்ளது.

தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

இதனை உடைக்கும்விதமாக வரும் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளிக்க உதயநிதி அறிவுறுத்தலின்பேரில் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் நன்றாக வேலை செய்தால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் இளைஞர்கள் மனதில் திமுக விதைக்க முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை மாநாடு மட்டுமின்றி இளைஞர்கள் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சீமான், அன்புமணி பக்கம் இருக்கும் இளைஞர்களுக்கு வலைவீசும் திமுக அதில் வெற்றி பெறுமா? என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாம்பும், கீரியுமாக ஆதவ் அர்ஜுனா vs புஸ்ஸி ஆனந்த்.. தவெகவில் அதிகார மோதல்.. விஜய்க்கு தலைவலி!
நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?