
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் எடுப்பதில் ரூ.1,020 கோடி ஊழலைக் கண்டறிந்துள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை இரண்டாவது முறையாக கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன் துறை மீதான குற்றச்சாட்டு குறித்து ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்த கே.என்.நேரு, ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அமலாகக்கத்துறையை ஏவி விட்டுள்ளதாக என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நான் எந்த தவறும் செய்யவில்லை என்று திருச்சி மக்களிடம் கே.என்.நேரு பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக பேசிய அவர், ''என் மீது பாஜக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம். ஆனால் தொடர்ந்து என்னை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி புகார் அனுப்பி இருக்கிறார்கள். நான் உங்களிடம் சொல்கிறேன் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் பாஜக அரசு வேண்டுமென்றே நேருவை அடித்தால் இந்த பகுதியில் திமுகவை அடிக்கலாம் என்ற நோக்கத்தோடு அந்த பணியை செய்து கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு உறுதி அளித்த கே.என்.நேரு
உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் நிச்சயமாக எந்த தவறும் செய்ய மாட்டேன். இதுவரை செய்ததும் இல்லை. இனிமேலும் செய்ய மாட்டேன் என்ற உறுதியை மட்டும் நான் உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதால் இது குறித்து அதிகம் பேச முடியவில்லை. 4 முறை தான் இந்த தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மற்ற அனைத்திலும் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது.
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்
தந்தை பெரியாருக்காக, அண்னாவுக்காக, கலைஞருக்காக, தளபதிக்காக இந்த தொகுதி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். என்றென்றும் நாங்கள் உங்களுக்கு உண்மையுள்ளவனாக இருப்போம். நாமதான் ஓட்டுப்போட்டு அனுப்பினோம் நேருவா இப்படி செய்து விட்டார்? என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அந்த மாதிரி நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நான் விளக்கம் அளிக்கிறேன். உங்கள் ஆதரவை எப்போதும் போல் தர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.