வைகை அணையின் முழு கொள்ளளவான 71 அடியில் நீர்மட்டம் 70 அடியை எட்டிய நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போல சோத்துப்பாறை அணையும் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை, சோத்துப்பாறை அணை திறப்பு
தென்மேற்கு பருவமழையானது பல்வேறு இடங்களில் தீவிரமாக பெய்து வருகிறது குறிப்பாக கன்னியாகுமரி,நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வேகமாக நிறைந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் அரசன் அடி, வெள்ளிமலை, முல்லைப் பெரியாறு, மேகமலை அதிக இடங்களில் மழை பொழிவானது அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியை எட்டியதைத் தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீர் இருப்பு 5825 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2735 கன அடி நீர் வந்து கொண்டுள்ள நிலையில்,2735 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது .
ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் குளிக்க, செல்பி எடுக்கத தடை... காரணம் இதுதான்!!
வெள்ள அபாய எச்சரிக்கை
இதன் காரணமாக தேனி,திண்டுக்கல் மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வைகை ஆற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள், வைகை ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுப்பணித்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.இதே போல சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை தனது முழு உயரமான 126.28 அடியை எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 126.28 அடியாகவும்,நீர் இருப்பு 100 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 55 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரியகுளம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளபுரம் ஆகிய வராக நதி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
விடாது ஊற்றும் கனமழை.. நிரம்பி வழியும் அணைகள்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!