
காரைக்கால்
புத்துணர்வு முகாம் முடிந்ததை அடுத்து தர்பாரண்யேஸ்வரர் கோவில் யானை “பிரக்ருதி” கோவிலுக்கு திரும்பிய போது தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் இருக்கிறது தர்பாரண்யேஸ்வரர் கோவில். இக்கோவில் சனீஸ்வரபகவான் தலமாகும்.
இக்கோவிலில் இருக்கும் யானையின் பெயர் “பிரக்ருதி”. 14 வயதுடைய பெண் யானை.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி வனப்பகுதியில் நடந்த கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டது.
கடந்த ஆண்டு 48 நாட்கள் நடைபெற்ற புத்துணர்வு முகாம், இந்த ஆண்டு 30 நாட்களுக்கு மட்டுமே நடை பெற்றது.
முகாமில் தினமும் நடைபயிற்சி மேற்கொண்ட பிரக்ருதி, காலை, மாலை என இரு வேளையும் பவானி ஆற்றில் உற்சாக குளியல் போட்டது.
கால்நடை மருத்துவ நிபுணர்கள் யானையின் உடல் நிலையை அடிக்கடி பரிசோதனை செய்தனர். தேவையான சத்துணவு மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இந்த முகாம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து யானை பிரக்ருதி தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு திரும்பியது.
திருநள்ளாறு தேவஸ்தானம் சார்பில் இளநிலை பொறியாளர் சரவணன், காரைக்கால் வன அலுவலர் தண்டபாணி, கால்நடை மருத்துவர் சுரேஷ் ஆகியோர் முகாமில் இருந்து லாரியில் யானையை கோவிலுக்கு அழைத்து வந்தனர்.
திருநள்ளாறு தேவஸ்தானத்துக்கு சொந்தமான சல்லித்தோட்டத்தில் வந்து இறங்கிய யானை பிரக்ருதிக்கு தேவஸ்தானம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.