
மதுரை
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டி.டி.வி.தினகரன் அடையாளம் காட்டும் வேட்பாளரை ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆருடம் சொன்னார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருமங்கலம் தொகுதி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பேரையூரில் நேற்று நடைப்பெற்றது.
இதற்கு, ஜெயலலிதா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது:
“ஜெயலலிதா மரணம் பற்றி அரசியல் இலாபத்துக்காக பன்னீர்செல்வம் தவறான தகவலை கூறி வருகிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் பொறுப்பேற்றதும் ஸ்கூட்டர் வாங்குவதற்கு பெண்களுக்கு 50 சதவீத மானியம் போன்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார்.
ரேசன் கடை முன்பு போராட்டம் நடத்தப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். தி.மு.க. ஆட்சியில் தான் ரேசன் கடைகளில் ஊழல் நடந்தது என்பதை அவர் மறந்து விடக்கூடாது.
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அடையாளம் காட்டும் வேட்பாளரை ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள். இந்த தேர்தலில் எதிர்கட்சிகள் டெபாசிட் இழக்கும்” என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “பன்னீர்செல்வத்தின் சதி திட்டங்களை சசிகலா முறியடித்துள்ளார். பன்னீர்செல்வத்தின் நாடகங்கள் மக்களுக்கு புரிந்து விட்டன. குறுக்கு வழியில் செயல்படும் தி.மு.க.விற்கு ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர்” என்றுத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.