
அழகர்கோவில்
அழகர்கோவில் பொய்கைகரைப்பட்டியில் நடைப்பெற்ற கள்ளழகர் தெப்பத்திருவிழாவில், வறட்சியால் தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரையை சுற்றி கள்ளழகர் வலம் வந்த அடியார்களுக்கு தரிசனம் வழங்கினார்.
திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் உள்ளது கள்ளழகர் கோவில்.
இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் மாசி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் தெப்பத்திருவிழாவும் ஒன்று.
இந்த விழா அழகர்கோவிலை அடுத்துள்ள பொய்கைகரைப்பட்டித் தெப்பக்குளத்தில் நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவையொட்டி நேற்று காலை கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள் பல்லக்கில் புறப்பட்டார். வழிநெடுகிலும் அடியார்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.
பொய்கைகரைப்பட்டியில் கிராம மக்களும், அடியார்களும் கள்ளழகரை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பொய்கைகரை தெப்பக்குளத்தை வந்தடைந்தார்.
தெப்பக்குளத்தில் தண்ணீர் இருக்கும்போது சாமி, தெப்பக்குளத்துக்குள் வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார். வழக்கமாக அப்படிதான் நடக்கும்.
ஆனால், இந்த முறை கடும் வறட்சி காரணமாக இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், வறண்ட குளத்தின் கரையை மட்டுமே சாமி சுற்றி வந்தார்.
பின்னர் தெப்பக்குளத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள மண்டகப்படியில் 11.34 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு வழிபாடு அலங்காரம், தீபாராதனை நடந்தது.
இவ்விழாவில், வெள்ளியங்குன்றம் ஜமீன்தார் சண்முக ராஜபாண்டியர் புலிகேசி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான அடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், மாலையில் வந்த வழியாகவே பல்லக்கில் சாமி கோவிலை சென்றடைந்தார்.
இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.