
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் முரட்டுத் தனமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து மின்னல் வேகத்தில் மரத்தில் மோதியதில் ஒருவர் பலியானர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் சிங். இவருடைய மகன் அசுதேவ்சிங் (21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் அசுதேவ்சிங் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் நேற்று மோட்டார் சைக்கிள்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்குச் சென்றுக் கொண்டிருந்தனர். செல்லும் வழியில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அந்தேவனபள்ளி என்ற இடத்தில் வந்தனர். அப்போது அசுதேவ்சிங் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மின்னல் வேகத்தில் மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அசுதேவ்சிங் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள், இதுகுறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற காவலாளர்கள் மாணவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர். மாணவர்கள் முரட்டுத் தனமாக வண்டி ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதா? என்ற கண்ணோட்டத்திலும் விசாரணை நடக்கிறது.