
காரைக்கால்
இலங்கை கடற்படையின் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து 11 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கச்சத்தீவு அருகே கடந்த சில நாள்களுக்கு முன்பு, மீன்பிடிக்கச் சென்ற இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூடு, தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காரைக்கால், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நாகையில் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கை கடற்படைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்தியா - இலங்கை கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சுமூகமான முறையில் மீன்பிடிக்கும் உரிமையை நிலை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம், உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காசாக்குடிமேடு, கோட்டுச்சேரிமேடு, அக்கம்பேட்டை, மண்டபத்தூர், காளிகுப்பம், மதகடி, கருக் களாச்சேரி, பட்டினச்சேரி, வடக்குவாஞ்சூர் ஆகிய 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை முதல் வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்தது. இதில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
மீனவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் தெரிவித்தனர்.