
திருவண்ணாமலை
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி நெசவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கொசப்பாளையம், பட்டு உற்பத்தியாளர்கள் சங்க மஹாலில் நேற்று கைத்தறி, கைவினைஞர்களுக்கு உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில், நெசவாளர்களுக்குத் தேவையான ஜாக்காடு பெட்டி, பட்டு நூல் சுற்றும் இயந்திரம், பட்டுச் சேலை நெய்யும் மரச் சாமான்கள் உள்ளிட்டவை கண்காட்சியாக வைக்கப்பட்டு, 90 சதவீத மானியத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, "மத்திய அரசு நெசவாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, வாழ்வாதாரத்தை பெருக்க வழிவகை செய்துள்ளது.
நெசவாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை மானிய விலையில் பெற்று பயனடையலாம். மேலும், நெசவாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் திட்டங்களை கேட்டறிந்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று பேசினார்.
பின்னர், காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய துணை இயக்குநர் டி.கார்த்திகேயன் செய்தியாளர்களிடம், "மத்திய நெசவுத் துறை அமைச்சகம், கைத்தறி அபிவிருந்தி ஆணையாளர் அலுவலகம் ஆகியவை கைத்தறி நெசவாளர்கள், கைவினைக் கலைஞர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக நாடு முழுவதும் 218 இடங்களில் கடந்த 19-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முகாமை நடத்துகிறது.
அதன்படி, நெசவாளர் சேவை மையம் நிகழ்ச்சி ஆரணியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்கள், நெசவுத் தொழில் முனைவோருக்கு நிதி தேவையை பூர்த்தி செய்ய ரூ.10 ஆயிரம் மானியத்துடன் ரூ.50 ஆயிரம் வரை கடன் தொகை வழங்கப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேலாண் இயக்குநர் தேவிபத்மஜா, காஞ்சிபுரம் தேசிய கைத்தறி வளர்ச்சிக் கழக முதுநிலை மேலாளர் சுப்பிரமணி, கைத்தறி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் தீபாசம்பத்,
அன்னை அஞ்சுகம் பட்டுக் கூட்டுறவு சங்கத் தலைவர் ரமணிநீலமேகம், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த வரதராஜ், பேங்க் ஆஃப் இந்தியா தனி உதவியாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.