
திருவண்ணாமலை
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருவண்ணாமலை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் 4-ஆம் ஆண்டு பேரவைக் கூட்டம் திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.ராஜாராம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.ராஜேந்திரன், கே.பாண்டிய ராஜா, ஆர்.நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். மாநில பொதுச் செயலர் கே.கர்சன், மாநில துணை பொதுச் செயலர் ஆர்.தேவராஜ், செயலர் எஸ்.லட்சுமி நாராயணன், பொருளாளர் எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், "புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
கடந்த 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களை உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும்.
தொழிலாளர்கள் ஓய்வு பெற 6 மாதம் உள்ள நிலையில், அவர்களின் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடர்பான தண்டனைகளை இறுதிப்படுத்த வேண்டும்.
பஞ்சப்படி உயர்வை அறிவிப்பு வந்த அதே நாளில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்" உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.