
திருவள்ளூர்
திருவள்ளூரில் பள்ளிக்கூடத்தில் நுழைந்து தலைமை ஆசிரியையிடம் இருந்து ஆறு சவரன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், மணவாளநகரைச் சேர்ந்த ஸ்ரீதரனின் மனைவி சுஜாதா (42). இவர், திருவள்ளூர் அருகே குன்னவாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை பள்ளி நேரம் முடிவதற்கு முன்னதாக, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அனுப்பியதாகவும், குறும்படம் திரையிடுவதாகவும் கூறி 25 வயது மதிக்கதக்க மர்ம நபர் ஒருவர் தலைமை ஆசிரியரின் அறைக்கு வந்துள்ளார் .
அதற்கு சுஜாதா எவ்வளவு செலவு என்று கேட்டவாறு உள்ளே சென்று மேஜையில் வைத்திருந்த செல்போனை எடுத்தபோது, ஆசிரியையின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலி மற்றொரு சங்கிலியை ஆகியவற்றை பறித்துள்ளார் அந்த மர்ம நபர். அப்போது ஒரு கையில் தங்கச் சங்கிலியை பிடித்தவாறே சுஜாதா அலறியுள்ளார்.
அவரது, அலறல் சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மாணவர் விஷ்ணு ஓடிவந்து மர்ம நபரின் இரண்டு கால்களையும் பிடித்து இழுத்துள்ளார். அப்போது, விஷ்ணுவை உதறி தள்ளிவிட்டு ஆறு சவரன் நகையை அறுத்துக் கொண்டு மர்ம நபர் அங்கிருந்து வெளியே தப்பி ஓடிவிட்டார். பின்னர், அங்கு தயாராக நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பிவிட்டார்.
இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் சுஜாதா அளித்த புகாரின் பேரில், காவலாளர்கள் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.