மின்னல் வேகத்தில் சுங்கச்சாவடியை இடித்து தள்ளிய டிப்பர் லாரி; வடமாநில இளைஞர் பலி; மூவர் காயம்...

First Published Feb 21, 2018, 10:28 AM IST
Highlights
Tipper lorry hit tollgate North indian youth killed Three Injured...


திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள சுங்கச்சாவடியை மின்னல் வேகத்தில் டிப்பர் லாரி இடித்ததில் அங்கு பணியில் இருந்த வடமாநில இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மூவர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் போரூர் அருகே சுங்கச்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த சுங்கச்சாவடியில் வடமாநிலங்களைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, வழக்கம்போல அந்த வழியேச் செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வண்டலூரில் இருந்து மாதவரம் நோக்கி ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

மின்னல் வேகத்தில் வந்த லாரி சுங்கச்சாவடியின் வரி வசூலிக்கும் 5-வது கவுண்ட்டர் மீது மோதியது. இதில் வசூல் மையத்திற்கு வெளியே நின்று கட்டணம் வசூல் செய்து கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் தமார் டக்குவா (24), என்பவர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

லாரி மோதியதில் வசூல் மையத்தின் ஒரு பகுதி முழுவதுமாக உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒடிசாவை சேர்ந்த சந்தீர் செட்டி(32), நில்மதுஷா (18) மற்றும் மணி(53) ஆகிய மூவர் பலத்த காயமடைந்தனர்.

அவர்கள் மூவரும் மீட்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராகேஷ் தமார் டக்குவா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவலாளர்கள் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர் சக்திவேல்(32), என்பவரை கைது செய்தனர்.

 

click me!