
மதுரை
தமிழன் வாழும் காலம் வரை பாரதியின் பாடல்கள் இருந்துக் கொண்டிருக்கும் என்று இலங்கை யாழ்ப்பாண இந்திய துணைத் தூதர் ஆ.நடராஜன் தெரிவித்தார்.
மதுரை கம்பன் கழகத்தினர் நேற்று எட்டாம் ஆண்டு பாரதி - ஒளவை விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கம்பன் கழகப் புரவலர் சங்கர சீதாராமன் தலைமை தாங்கினார். கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா சிறப்பு விருந்தினர்களை கெளரவித்தார்.
கனரா வங்கித் துணை மேலாளர் ஏ. சண்முகம், தெற்கு ரயில்வே மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ. ஹரிகிருஷ்ணன், விஜயதயா ரியல்டர்ஸ் சேர்மன் எஸ்.ஆர். முத்துவிஜயன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில் நடைப்பெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவியருக்கு இலங்கை யாழ்ப்பாண இந்திய துணைத் தூதர் ஆ.நடராஜன் பரிசுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசியது: "ஆன்மிகம், தமிழின் பாரம்பரிய நகரமாக மதுரை விளங்குகிறது. இலக்கியத் தமிழ் வளர்த்த மதுரையில் ஒளவை-பாரதி விழாவை இங்கு கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.
பாரதி வாழ்ந்த காலத்தில் அவருக்குரிய மரியாதையை நாம் வழங்கவில்லை. அவரது இறுதி ஊர்வலத்தில் கூட மிகச் சிலரே கலந்துகொண்டுள்ளனர். ஆனால், தற்போது பாரதியின் பாடல்கள் தமிழர்கள் வாழுமிடமெல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தமிழன் வாழும் காலம் வரை பாரதியின் பாடல்கள் இருந்துக் கொண்டிருக்கும்.
உலகில் பண்பாடு, செல்வமிக்க நாடாக இந்தியா எப்போதும் திகழ்கிறது. நமது நாட்டின் மீது போர் தொடுத்து வந்தவர்களே செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஆனால், நாம் எந்த நாட்டுடனும் போர்புரிந்து சென்று, அவர்களது செல்வத்தை அபகரித்ததில்லை. அதுவே பாரதப் பண்பாடாக உள்ளது.
வெளிநாடுகளில் அந்நாட்டுக்காக உயிர் துறந்தவர்களை ஆண்டுதோறும் நினைவு கூரப்படுவதில்லை. ஆனால், நமது இந்தியாவில் மட்டுமே நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து வருகிறோம். அதுவே, நமது பண்பாடு, கலாசாரம். இதையே வெளிநாட்டவர் வியந்து பாராட்டுகின்றனர்.
இந்தியாவில் மட்டுமே அன்னிய தேசத்தவரும் வந்து தங்கிப் பாதுகாப்போடும், செல்வாக்குடனும் வாழும் நிலை உள்ளது. அந்தப் பண்பாட்டுக்காகவே உலக நாடுகள் இந்தியாவை போற்றுகின்றன.
எதையும் எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்கும் பண்பாட்டை நமது முன்னோர்கள் நமக்கு கற்றுத் தந்துள்ளனர். பாரதப் பண்பாட்டின் மூலமே காந்தியடிகள் மகாத்மா என்ற உயர்ந்த தலைவராக திகழ்ந்துள்ளார். அவரை அரையாடை மனிதராக்கிய பெருமை மதுரை மண்ணுக்குரியது" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கம்பன் கழகச் செயலர் அ. புருஷோத்தமன் வரவேற்றார். இணைச் செயலர் தா.கு. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
பட்டிமன்றப் பேச்சாளர் எஸ். ராஜா, பாரதி பாஸ்கர், ரவி தமிழ்வாணன், பேராசிரியர் கு. ராமமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.